உதயநிதி அவர்களின் ஆளுமைத் திறனால் கழக இளைஞர் அணி மாபெரும் உச்சத்தை அடையும்!: தி.வை.இரவி - திருநின்றவூர் பேரூர் கழகச் செயலாளர், திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

51 வயதாகும் தி.வை.இரவி அவர்கள், திருநின்றவூர் பேரூர் கழக செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். 



'நமது தளபதி' இதழுக்காக தி.வை.இரவி அவர்களை நாம் நேரில் சந்தித்து உரையாடியபோது, “நான் கடந்த 35 ஆண்டு காலமாக இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இதற்கு முன்னர் திருவொற்றியூர் பகுதியில் வட்டக் கழகப் பிரதிநிதியாக செயல்பட்ட நான், அதன்பிறகு, திருநின்றவூர் பேரூர் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன்.  இந்தப் பதவியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவர் தளபதியாரின் ஆசியுடன் செயல்பட்டு வருகிறேன். 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்ட நான், தலைவர் தளபதியாரின் ஆசியுடன் வெற்றி பெற்று திருநின்றவூர் சிறப்பு பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2011ம் ஆண்டு வரையில் மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கழகத் தலைவர் தளபதியாரின் ஆசியுடன் வெற்றிபெற்று, திருநின்றவூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவராக 2016ம் ஆண்டு வரையில் மக்கள் பணியாற்றினேன்” என்று உணர்வுப் பெருக்கோடு நம்மிடம் பேசத் துவங்கியவர், சற்றே யோசனைக்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்தார்.


“நமது கழகம் முன்னெடுத்த மக்கள் நலப் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும், மறியல் போராட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டு வரும் நான், போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக பல முறை கைது செய்யப்பட்டதோடு, சில முறை சிறைக்கும் சென்றிருக்கிறேன். முக்கியமாக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு முந்தைய ஜெ.அரசால் கைது செய்யப்பட்டபோது, தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நான், காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். மேலும், கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் ராணிமேரி கல்லூரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது, போராட்டத்தில் ஈடுப்பட்ட நான், ஆறு நாட்கள் சிறைவாசம் அனுபவித்தேன். இதுபோன்று மேலும் இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாக உரையாடியவர் நமது வினாக்களுக்கு பதில் அளிக்கத் துவங்கினார்.


உங்கள் திருநின்றவூர் பேரூராட்சி பற்றிச் சொல்லுங்களேன்?
“எங்கள் திருநின்றவூர் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரம். இவர்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 35 ஆயிரம். மொத்தம் 38 பாகங்களைக் கொண்டுள்ள எங்கள் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சிறப்பு நிலை பேரூராட்சி என்று குறிப்பிடப்பட்டாலும், எங்கள் பேரூராட்சி மிகவும் பின்தங்கிய பகுதியாகத்தான் தற்போது இருந்து வருகிறது. கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆசியோடு 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் நான் இந்த பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்த போதும், அதன் பிறகு 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் நான் பேரூராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தபோதும், நிறைய மக்கள் பணிகளை இங்கு நிறைவேற்றி முடித்தேன். ஆனால், அதற்குப் பிறகான கால கட்டத்தில் எவ்வித மக்கள் நலப் பணிகளும் நடைபெறாமல், நிர்வாகச் சீர்கேட்டால், பின்தங்கிப் போய்விட்டது எங்கள் பேரூராட்சி என்பதே உண்மை. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்பதை நீங்கள் இந்தப் பேரூராட்சியை சுற்றி வந்தால் அறிந்து கொள்ள முடியும்.


இப்போது, எங்கள் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மக்கள் நலப் பணிகள் ஏராளம் உள்ளன. முக்கியமாக, பாதாள சாக்கடைத் திட்டம், ஏரிகளைத் தூர்வாரும் பணிகள் ஆகியவை மக்களின் இப்போதைய கோரிக்கையாக இருந்து வருகிறது. 'தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது இந்தப் பணிகள் யாவும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்கப்படும்' என கடந்த பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, கழகத் தலைவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆகவே, அடுத்து அமையவிருக்கும் கழக ஆட்சியில் இந்தப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்பது 100 சதவீதம் உறுதி.


மேலும், எங்கள் பேரூராட்சியில் புகழ்பெற்ற இருதயலிங்கேஸ்வரர் திருக்கோயிலும், பக்தவத்சல பெருமாள் திருக் கோயிலும் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது சிறப்பு.


தற்போது மக்களின் அடிப்படைத் தேவைகளாக இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில், மின்தட்டுப்பாடு, சென்னை முதல் திருவள்ளூர் வரையிலான சாலை விரிவாக்கம், தண்ணீர் பற்றாக்குறை போக்குதல் ஆகிய பணிகள் முன்னுரிமை கொடுத்து, உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் மக்களின் கோரிக்கை.”


கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்கள் பற்றி?
“உதயநிதி அவர்களின் வருகைக்குப் பிறகு கழக இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சப்பட்டு, கழகத்திறத்கான வளர்ச்சிப் பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு இளைஞர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் உதயநிதி அவர்கள். இதனால், அடுத்தடுத்து வரும் காலங்களில் கழக இளைஞர் அணி என்பது, இமயம்போன்ற வளர்ச்சி பெற்று, மாபெரும் உச்சத்தை அடையும் என்பது உறுதி.”


உங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் பற்றி?
“கழகத் தலைவர் தளபதியாரின் ஆணைகளை அடிபிறழாமல் நிறைவேற்றி முடிக்கும் ஆற்றல் வாய்ந்த எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள், கட்சிக்காரர்களை தன் அன்பால் அரவணைத்து, ஒருங்கிணைத்து வழிநடத்துவதில் தன்னிகரற்றவர். குறிப்பாக, கட்சிக்காரர்களின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்குபெறுவார். கட்சிக்காரர்களை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஒவ்வொரு தொண்டனின் பெயரையும் ஞாபகத்தில் வைத்து அழைப்பார். கட்சிப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் மும்முரமாகச் செயல்பட்டு, மக்கள் மனதிலும், கட்சியினர் மத்தியிலும் தனக்கென தனி முத்திரை பதித்து, செயலாற்றி வருகிறார்.”


வேறு ஏதாவது?
“நான் 2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்தபோதும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் பேரூராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த போதும், தலைவர் தளபதியார் ஆசியுடன், கட்சி பாகுபாடு இல்லாமல், மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீரத்து வைத்தேன். என்னுடைய பதவிக் காலத்தில் தங்கு தடையின்றி மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றி முடித்தேன் என்பது எனக்கு பெருமை. குறிப்பாக, பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் கட்டிடங்களைக் கட்டியது எங்கள் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோல், சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதையும்  'நமது தளபதி' இதழ் மூலமாகப் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.”  .